வலைப்பதிவு

mind-body-connection

நம் மன ஆரோக்கியத்திற்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் என்ன சம்பந்தம்?

நம் மன-உடல் இணைப்பு நமது மனம் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு இடையிலான மேலெழுச்சியை விவரிக்கிறது. நம்மை நாமே பார்த்துக்கொள்வதனால் நம் ஆரோக்கியத்தைப் பெரிதும் மேம்படுத்தலாம்.

நம்மில் பலர் மனதையும் உடலையும் இரண்டு தனித்தனி விஷயங்களாக நினைக்கிறோம். பிரச்சனைகளைச் சரி செய்வதற்குக்கூட உடல் ரீதியான நோய்களுக்கு ஒரு தனி மருத்துவரையும் மனதில் ஏற்படும் அழுத்தத்திற்கு மன நல மருத்துவரையும் தேடுகிறோம். ஆனால், விஞ்ஞானிகள் இரண்டிற்கும் இடையில் பல ஒருங்கிணைக்கும் தன்மைகள் இருப்பதாகக் கண்டுபிடித்து வருகின்றனர்.

ஒரு ஆரோக்கியமான மன நிலை உங்கள் உடலை சிறப்பாக வேலை செய்ய வைக்கிறது, மற்றும் ஒரு ஆரோக்கியமான உடல் உங்கள் மன நலனை மேம்படுத்துகிறது. இவை இரண்டும் சேரும் போது மனம்-உடல் இணைப்பு என்ற ஒரு அலகாக மாறுகின்றன. இந்த மனம்-உடல் இணைப்பு MHQ இன் ஒரு துணை வகையாகும். இந்த முக்கியமான இணைப்பைக் கவனிப்பதனால் உங்கள் ஒட்டுமொத்த நல்வாழ்வைக் கணிசமாக மேம்படுத்தலாம்.

ஒரு ஆரோக்கியமான மனம்-உடல் இணைப்பு இருந்தால், உங்களால்:

  • இரவில் நன்றாக தூங்கி காலையில் புத்துணர்ச்சியுடன் எழுந்து கொள்ள முடியும்
  • உங்கள் உடல் அசைவுகளை ஒருங்கிணைக்க முடியும் (நல்ல கண்-கை ஒருங்கிணைப்பு போன்றவை)
  • அன்றாட வேலைகளை செய்வதற்கான மன, உடல் மற்றும் உணர்ச்சிவசமான ஆற்றலை வெளிப்படுத்த முடியும்
  • உங்கள் உணவுப் பழக்கங்களை கட்டுப்பாட்டிற்குள் வைத்து, ஆரோக்கியமான உடல் எடையைப் பராமரிக்க முடியும்
  • மன அழுத்தத்தை உறுதியுடன் சமாளிக்க முடியும்

மாற்றாக, உங்கள் மனம் மற்றும் உடல் இணைப்பில் உங்களுக்குச் சிரமம் இருந்தால், உங்களுக்கு:

  • அடிக்கடி சளி, இருமல் அல்லது நோய்த்தொற்றுகளால் பாதிப்பு ஏற்படும்
  • வெளிப்படையான உடல் ரீதியான காரணங்கள் எதுவுமின்றி அறிகுறிகள் (செரிமானப் பிரச்சனைகள் போன்றவை) மட்டும் இருக்கலாம்
  • நாள்பட்ட நோய் அல்லது அடிக்கடி வலி அனுபவிக்கலாம்
  • பெரும்பாலும் சோர்வாக இருப்பது
  • பாலியல் ஆர்வம் குறைந்திருப்பதை நீங்கள் உணரலாம்

மனம்-உடல் இணைப்பின் புரிதல்

உங்கள் மனமும் உடலும் தொடர்பு கொள்ளப் பல வழிகள் உள்ளன. இதில் ஒரு வழி நமது குடல் ஆரோக்கியத்திற்கும் மன ஆரோக்கியத்திற்கும் இடையிலான இரு-வழி உறவு – இது குடல்-மூளையின் மூலாதாரத்தால் நிர்வகிக்கும் ஒன்றாகும். இதன் அர்த்தம் என்னவென்றால், உங்கள் மன நிலை உங்கள் குடலில் நீங்கள் அனுபவிக்கும் அறிகுறிகளைப் பாதிக்கலாம், அதேபோல் உங்கள் குடல் ஆரோக்கியம் உங்கள் மன நிலையைப் பாதிக்கலாம்.

மற்ற ஆதாரங்கள் மன ஆரோக்கியத்திற்கும் நமது நோயெதிர்ப்புச் செயல்பாட்டிற்கும் இருக்கும் தொடர்பைக் குறிக்கின்றன, இதில் மனச்சோர்வு போன்ற பிரச்சனைகளும் அடங்கும். மீண்டும், இதில் இந்த இணைப்பின் இரு வழி செயல்பாடே மிக முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விஷயம் – மேலும் சொல்லப் போனால் உங்கள் மன நிலை உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை எப்படிப் பாதிக்கின்றது என்று மட்டும் இல்லாமல் உங்கள் நோயெதிர்ப்பு உங்கள் மன நிலையை எந்த விதத்தில் பாதிக்கின்றது என்பதையும் பார்க்கவேண்டும்.

மேலும், நாம் மன அழுத்தம் ஏற்படும்போது எப்படிச் சிந்திக்கிறோம், எப்படி நடந்துகொள்கிறோம் மற்றும் நம் உடல் பிரச்சனைகளை எப்படி கையாள்கிறோம், இவை எல்லாம் நம் மனம்-உடல் இணைப்பைப் பாதிக்கலாம்.

எடுத்துக்காட்டாக, ஒரே விதமான பிரச்சனைக்குப் பலர் பல விதமாக நடந்துகொள்ளலாம்.ஒருவர் தன் வேலையை யாராவது குறை சொன்னால் அதைச் சவாலாக எடுத்துக்கொண்டு அந்த குறை கூறுபவரிடம் தன்னை நிரூபிக்கலாம். மற்றொருவர் இதே சூழ்நிலையில் தன்னை தானே துன்புறுத்திக் கொண்டோ அல்லது எதிர்காலத்தில் இது போல் பழி மீண்டும் வருமோ என்று கவலைப்பட்டுக் கொண்டிருக்கலாம். இதனால் அதிக இதயத் துடிப்பு, ஆரோக்கியமற்ற உணவு அல்லது தலைவலி போன்றவை ஏற்படலாம்.

மற்றொரு எடுத்துக்காட்டு நாள்பட்ட வலி உள்ளவர்களுடன் காணப்படுகிறது. சில நேரங்களில் சிலருக்கு எந்நேரமும் அல்லது அவ்வப்போது வலி ஏதாவது உடல் பிரச்சினையால் இருந்துகொண்டே இருக்கும். இந்த வலியை ஒரு அசௌகரியமாகக் கருதி தனது உடல் ஆரோக்கியத்தின் மேல் அக்கறை காட்டுவதன்மூலம் காலப்போக்கில் அந்த வலியைச் சமாளித்துவிடலாம். ஆனால், அவர்கள் விரக்தி அடைந்து, அந்த வலியினால் கோபப்பட்டு உணர்ச்சிக் கட்டுப்பாடின்றி நடந்துகொண்டால், அந்த எண்ணங்கள் மற்றும் கோபத்தினால் வலி மற்றும் அதன் ஆற்றல் அதிகரிக்கக்கூடும். இந்த விரக்தி அவர்கள் குணமடைவதற்கான வேலையில் ஈடுபடுவதையும் தடுக்கலாம்.

எப்பொழுதும் மன அழுத்தத்தில் இருப்பது, உணர்ச்சிவசப்படுவது, மற்றும் பொதுவாக ஒரு எதிர்மறையான கண்ணோட்டத்துடன் இருப்பதனால் இரத்த அழுத்தத்தை அதிகரித்து, நோய் எதிர்ப்புச் சக்தியைக் குறைத்து, மேலும் ஆயுட்காலத்தைக் கூட குறைக்கலாம்.

என் மனம்-உடல் இணைப்பை மேம்படுத்த முடியுமா?

உங்கள் உணர்ச்சி பிரச்சனைகளையும் உடல் சீர்குலைவுகளையும் நீங்கள் கையாளும் தன்மையே உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான சிறந்த வழியாகும். மன நிலை மற்றும் கண்ணோட்டம் போன்ற நல்வாழ்வின் பிற பகுதிகளில் நீங்கள் போராடுகிறீர்கள் என்றால் அதற்கான ஆதரவைப் பெறுவது கண்டிப்பாக உதவும்.

குறிப்பிட்ட சில சிகிச்சை முறைகள் – அறிவாற்றல் நடத்தை சிகிச்சை (CBT)போன்றவை உங்கள் மன நலனைப் பாதிக்கும் எதிர்மறையான சிந்தனை முறைகளை மாற்றுவதற்கு உதவும். உங்கள் உடல் ஆரோக்கியத்தைப் பார்த்துக்கொள்ளும் வழியில் உள்ள தடைகளை நீக்குவதற்கும் இது உதவும்.

உங்கள் நலனை மேம்படுத்துவதற்கு ஆரோக்கியமான உணவு முறையைப் பின்பற்றுவது, போதுமான தூக்கத்தைப் பெறுவது மற்றும் தவறாமல் உடற்பயிற்சி செய்வது போன்ற அடிப்படையான வழிகளும் உள்ளன. உடலைக் கவனித்துக்கொள்வது மனதைப் பாதுகாக்கிறது. உடற்பயிற்சி அதிகரிப்பதன் மூலம் சிலருக்கு மனச்சோர்வுக் குறைவதற்கு உதவுகிறது என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நாம் அனைவரும் அறிந்த பல நன்மைகள் மட்டுமல்லாமல், உடற்பயிற்சியினால் நரம்பு செல் இணைப்புகளை மேம்படுத்தலாம், இதனால் மூளையும் சிறப்பாகச் செயல்படும்.

மூளையை மறுசீரமைக்கவும், மன அழுத்தத்தைச் சமாளிப்பதற்கும் மனந்தெளிநிலை என்ற பயிற்சியின் நன்மைகளையும் பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த மனந்தெளிநிலைப் பயிற்சி செய்பவர்கள் பெரும்பாலும் உணர்ச்சிக்கட்டுப்பாடுடன் நடந்து, நெருக்கடி நேரங்களில் சிறப்பாகச் செயல்பட்டு மற்றும் பொதுவாகக் குறைந்த மன அழுத்தத்துடன் இருப்பதாக உணருகிறார்கள் – அவர்களின் மற்ற சூழ்நிலைகள் மாறாத நிலையிலும்.

நீங்கள் கடினமான அறிகுறிகளை அனுபவித்துக்கொண்டிருந்தால், உங்கள் மருத்துவரிடம் இதைப் பற்றிப் பேசுவது மிக அவசியம். ஒரு சிகிச்சையாளரிடம் பேசுவதனால் உங்களுக்கு எந்தவொரு சிகிச்சையளிக்கப்படாத மன நல நிலைமை இருந்தாலும், உங்கள் உடல் பிரச்சனைகளுடன் அதையும் கவனித்துக்கொள்ளலாம். உங்களுக்கு இந்த சேவைகள் பெறுவதற்கு எங்கே செல்ல வேண்டும் என்று குழப்பமாக இருந்தால், நீங்கள் அமெரிக்காவில் இருந்தால், போதைப்பொருள் துஷ்பிரயோகம் மற்றும் மனநலச் சேவைகள் நிர்வாகத்தை (SAMHSA) தொடர்பு கொள்ளலாம்.

உங்கள் மனம்-உடல் இணைப்பை மேம்படுத்துவதை இன்றே தொடங்க பல வழிகள் உள்ளன. மனம் மற்றும் உடலின் செயல்பாடுகளை இணைக்கும் பல செயற்பாடுகள் உள்ளன. எடுத்துக்காட்டாக, யோகா, புதிய நடனக்கலைகளைக் கற்றுக்கொள்வது (உடல் மற்றும் மனதை உதவும் விதத்தில்), தாய் சி அல்லது வெறுமனே மனதை ஒருநிலைப்படுத்தும் நடைப்பயிற்சி செய்வது, இவை அனைத்தும் இதற்கு உதவும். நீங்கள் வசிக்கும் பகுதியில் இவை போன்ற பயிற்சிகள் மேற்கொள்வது கடினமாக இருந்தால், ஜூம் மூலமாக வகுப்பு எடுத்துக்கொள்வது, ஒரு புதிய செயல்பாட்டை ஒட்டுமொத்தமாக முயல்வது அல்லது ஆன்லைனில் உடற்பயிற்சி வீடியோவை பின்பற்றுவது ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளுங்கள். உங்கள் மன மற்றும் உடல் ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்ள இதுவே சிறந்த நேரம்.