MHQ மதிப்பெண் எதிர்மறையாக இருப்பது தீவிரமான மனநலப் பிரச்சினையைச் சுட்டிக் காட்டுகிறது. நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியவையும், எவ்வாறு உதவி பெறுவது என்பது குறித்தும் இங்கே காணலாம்
MHQ (மனநல ஈவு)இல் எதிர்மறை மதிப்பெண்கள் இருந்தால் நீங்கள் ஒரு தீவிரமான மனநல பாதிப்பின் பிடியிலோ அல்லது அபாயத்திலோ இருக்கலாம் என்று நாம் புரிந்துகொள்ளலாம். கட்டுப்படுத்தாமல் விட்டால் இதனால் உங்கள் வாழ்க்கைக்கும், உயிருக்குமே ஆபத்தாக இருக்கலாம். உதவி நாடுவது மிக மிக அவசியம். எதிர்மறையான மனநல மதிப்பெண் பெறுவதற்கான சில காரணங்கள் இங்கே காணலாம் –
- உங்கள் செயல்பாட்டைப் பாதிக்கும் மரபணு நிலை
- தீங்கு விளைவிக்கும் மருந்து பக்க விளைவுகள்
- நரம்பியல் பிரச்சனைகள்
- தலையில் காயம் போன்ற விபத்திலிருந்து ஏற்படும் விளைவுகள்
- வாழ்க்கை அதிர்ச்சி
எதிர்மறையான மதிப்பெண்ணை ஏற்படுத்தக் கூடிய சில காரணங்கள் தான் இவை. இருப்பினும் ஒரு முழுமையான பரிசோதனை செய்த நிபுணரால் மட்டுமே சரியான காரணத்தை உறுதியாகச் சொல்ல முடியும்.
மருத்துவ உதவியை நாடுவது முக்கியம்
ஒரு தகுதி வாய்ந்த மனநல நிபுணரால் பெரும்பாலும் உங்கள் பிரச்சனைகளை நீங்களே நிர்வகிக்க, திருப்பிவிட அல்லது அகற்றிவிடுவதற்கு உதவ முடியும். இருப்பினும் பிரச்சனை இருக்கிறது என்று தெரிந்தும் பலர் மன நல மருத்துவரிடம் செல்வதில்லை. இதற்குப் பயம், விலகுதல், களங்கங்கள் அல்லது அறியாமை போன்ற பல காரணங்கள் இருக்கலாம். உண்மையைச் சொன்னால், மன உளைச்சல் அல்லது போராடும் பிரிவில் உள்ளவர்களில் 44% பேர் தாங்கள் உதவி கேட்கவில்லை என்று தெரிவித்துள்ளனர். இதில் துரதிருஷ்டமான விஷயம் என்னவென்றால் இதனால் அவர்களின் சவால்கள் காலப்போக்கில் இன்னும் மோசமாகக்கூடும்.
மன உளைச்சல் ஏற்படுத்தும் மன நலச் சவால்கள் பெரும்பாலும் நம்மை மிகவும் பலவீனப்படுத்தக்கூடியவை, இதற்கு பல வகையான சிகிச்சைகளும், நீடித்த நிர்வாகமும் அவசியம். ஒருவருக்கு வேலை செய்யும் சிகிச்சை, மற்றொருவருக்கு செய்யாமல் போகலாம். இருப்பினும் மருத்துவ உதவியைப் பெறுவது பலருக்குப் பயனுள்ளதாக அமைந்திருக்கிறது. அமெரிக்காவில் 40% க்கும் மேற்பட்ட மக்கள் மன நல ஆலோசனையில் கலந்து கொண்டுள்ளனர் மற்றும், ஆறு பேரில் ஒருவர் ஏதாவது ஒரு விதத்தில் மனநல மருந்துகள் எடுத்துக்கொள்கிறார்கள். நாம் தனியாக இருந்தால் குணமடைவது எளிதல்ல என்று பலர் புரிந்து கொண்டனர். ஒரு ஆலோசகரின் உதவி எந்த வழிகளில் வித்தியாசத்தை ஏற்படுத்தும் என்று இங்கே காணலாம் –
- குழப்பங்களைத் தடுக்கும். சில மனநலப் பிரச்சனைகள் போதைப் பழக்கம், தற்கொலை நடத்தைகள், வன்முறை செயல்கள் அல்லது தனிமைப்படுத்தல் ஆகியவற்றை ஏற்படுத்தலாம். ஒரு தகுதி வாய்ந்த ஆலோசகர் இந்தப் பிரச்சனைகளை நன்கு அறிவதனால் சிகிச்சை அளிக்கவோ அல்லது பிரச்சனைகளைத் தடுக்கவோ முடியும்.
- மருத்துவ பிரச்சனைகளை கண்டறிதல். ஏற்கனவேக் கூறியபடி சில நேரங்களில் மனநல பிரச்சனைகள் ஒரு உடல் ரீதியான காரணத்தைக் கொண்டிருக்கலாம். இந்த காரணத்தைக் கண்டுபிடித்து சிகிச்சை அளிப்பது ஒரு உயிர் காக்கும் செயலாக இருக்கலாம்.
- வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதல். ஒரு எதிர்மறையான MHQ உங்களுக்கு ஏற்கனவே தெரிந்ததை இன்னும் தெளிவுபடுத்தக்கூடும் – அதாவது வாழ்க்கை ஒரு போராட்டம். சமீபத்திய உலக நிகழ்வுகளால் இது மேலும் சிக்கலாக இருக்கலாம். ஒரு தகுதி வாய்ந்த மன நல மருத்துவரால் உங்களுக்குச் சிகிச்சை அளித்து, நிர்வகித்து மற்றும் சில சந்தர்ப்பங்களில் மனநல பிரச்சனைகளை அகற்றவும் உதவ முடியும். இது பெரும்பாலும் உறவுகள் மேம்படுத்துவதற்கு, வாழ்க்கையில் திருப்தி அடைவதற்கு மற்றும் வாழ்க்கை இலக்குகளை அடையாளம் காணவும் அடையவும் வழிவகுக்கும்.
இதற்குத் தொடர்பான இடுக்கைகளைப் பார்க்கவும் – மன நிலை மற்றும் மனோபாவத்தைப் புரிந்து கொள்ளுதல் மற்றும் சமூக தன்னுணர்வு என்றால் என்ன
உடனடியாக உதவி தேவைப்படுகிறது என்பதைக் குறிக்கும் எச்சரிக்கை அறிகுறிகள்
ஒரு மனநல மருத்துவரையோ அல்லது ஆலோசகரையோ கண்டுபிடிப்பது முக்கியமாக இருந்தாலும், சில நேரங்களில் அவர்களைக் காண முன்பதிவு செய்து காத்திருப்பதை விட உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவற்றில் அடங்கியவை –
- மன நிலையில் திடீர் மாற்றம். உங்கள் மன நிலையில் ஒரு திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளதை நீங்கள் கண்டாலோ அல்லது மற்றவர்கள் கவனித்து அதை பற்றி கருத்துத் தெரிவித்தாலோ உங்கள் மருத்துவரை அல்லது அவசர மருத்துவ சேவைகளை உடனடியாக அணுக வேண்டும். இது ஆபத்தில் முடியக் கூடிய மனப்பிரச்சனையின் அறிகுறியாக இருக்கலாம், இருப்பினும், உடனடியாக உதவி பெற்றால் நல்ல வித்தியாசத்தைக் காணலாம்.
- தற்கொலை அல்லது சுய தீங்கு பற்றிய எண்ணங்கள். உங்களை நீங்களே காயப்படுத்திக்கொள்வது அல்லது தற்கொலை செய்து கொள்ள நினைப்பது போன்ற சூழ்நிலைகள் இருந்தால், நீங்கள் தனியாக அல்ல. பலருக்கு இதைப் போல் எண்ணங்கள் தோன்றும், ஆனால் இந்த சூழ்நிலை நீங்கள் சொந்தமாகச் சமாளிக்கக் கூடியது இல்லை. உங்கள் ஊரில் அவசர சேவைகளை உடனடியாக அணுகவும்.அல்லது தற்கொலை தடுப்பு லைஃப்லைனை தொடர்புகொள்ள இங்கே வருகை தரவும்.. நீண்ட கால ஆதரவுக்காக உங்கள் மருத்துவர், சிகிச்சையாளர் அல்லது உங்கள் பகுதியில் உள்ள பிற மனநலச் சேவைகளை நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டும்.
- மற்றவர்களுக்குத் தீங்கு விளைவிப்பது. தற்கொலை எண்ணங்களைப் போலவே சிலருக்கு எப்போதாவது மற்றவர்களுக்குத் தீங்கு விளைவிக்க வேண்டும் என்று தோன்றலாம். இதுவும் ஒரு மன நோயாகவோ அல்லது மருந்தின் பக்க விளைவாகவோ இருக்கலாம். உங்கள் மருத்துவரை அல்லது ஆலோசகரை உடனடியாக அணுகி உதவி பெற வேண்டும். உடனடியாக ஒருவரைக் காய படுத்த வேண்டும் என்ற எண்ணங்கள் உங்களுக்குத் தோன்றினால், அவசர சேவைகளைத் தொடர்புகொள்ளவும்.
ஆலோசனைப் பெற விருப்பத் தேர்வுகள்
நீங்கள் உடனடி ஆபத்தைச் சந்திக்கவில்லை என்றால், அடுத்த நடவடிக்கை, ஒரு மருத்துவரிடம் சந்திப்பிற்கான நேரத்தைப் பெறுவது. அதற்கான சில விருப்பத் தேர்வுகள் இங்கே காணலாம் :
- உங்கள் முதன்மை பராமரிப்பு மருத்துவரிடம் பேசுங்கள். உங்கள் மருத்துவர் உங்கள் நிலைமையை மதிப்பிட்டு உங்கள் சிரமங்கள் மற்றும் அபாயங்களுக்குச் சிகிச்சை அளித்து ஒரு பொருத்தமான நிபுணரிடம் செல்வதற்கு உங்களைப் பரிந்துரைக்கலாம்.
- ஒரு மனநல மருத்துவருடன் சந்திப்பை ஏற்பாடு செய்யவும். மனநல மருத்துவர்கள் உங்களுக்குத் தகுந்த மருந்துகளை அளிப்பதுடன் உங்களுக்கு ஏற்ற மற்ற நிபுணர்களைப் பரிந்துரைக்கலாம். இது சிலருக்குப் பயத்தை ஏற்படுத்தலாம், எனினும் அமெரிக்காவில் ஆறில் ஒருவர் மனநல மருந்துகளை உட்கொள்கிறார்கள். இது அசாதாரணமானது அல்ல, இதனால் ஒரு பெரிய மாற்றம் ஏற்படலாம். டெலி சைக்கியாட்ரி போன்ற இணையம் வழியிலான விருப்பங்களையும் நீங்கள் ஆராயலாம், அவ்வாறு குறைந்த விலைக்கு நீங்கள் உதவி பெறலாம்.
- சிகிச்சை பெறுவதற்கு முன்பதிவுச் செய்யவும். பல சிகிச்சையாளர்கள் உங்களுக்கு முழு மனநல ஆய்வை செய்து ஒரு சிகிச்சை முறையைப் பரிந்துரைக்கலாம் அல்லது வேறு ஒரு மருத்துவரிடம் செல்வதற்குப் பரிந்துரைக்கலாம்.
நீங்கள் வசிக்கும் இடத்தில் சிகிச்சை பெற உங்களுக்கு வாய்ப்பில்லை என்றால் நீங்கள் டெலிஹெல்த் மூலமாக உதவி பெறலாம். அமெரிக்காவில் நீங்கள் SAMHSA (போதைப்பொருள் துஷ்பிரயோகம் மற்றும் மனநல சவைகள் நிர்வாகம்) ஹெல்ப்லைனை 800-662-4357 என்ற எண்ணில் அழைக்கலாம்.
உங்களுக்கு உதவி பெறுவதற்குப் பயமாக இருந்தாலும், நீங்கள் தனியாக இல்லை என்பதை மனதில் கொண்டு சிறந்த நடவடிக்கையை உடனடியாக எடுத்து, உங்கள் வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ளவும்.